அரியும் சிவனும் ஒன்றென்பது ஆன்றோர்
வாக்கு!
இங்கே அரியும் சிவனும் ஒன்றிணைந்து சரபேஸ்வரராக அருளாசி வழங்குகிறார்கள்.
உலகத்தில் அநீதிகள் அதிகரித்து அதர்மம் ஓங்கி நல்லவர்கள் துன்பங்களுக்கு ஆளாகின்றபோது ஆண்டவன் அவதரித்து அரக்கர்களை வதம் செய்வார் என்பது புராண இதிகாசங்கள் மூலம் சொல்லப்படும் செய்தி. அதன்படி அநீதியின் மொத்த உருவமாக இருந்த இரண்யகசிபுவை வதம் செய்ய திருமால் நரசிம்மராக அவதாரமெடுத்து இரண்ய வதம் செய்தபின்னரும் கோபம் தனியாத நிலையில், நரசிம்மரின் கோபம் தணிக்க சிவபெருமான் சரபேஸ்வரராகத் தோன்றினார். அந்த இடம்தான் திருபுவனம் சரபேஸ்வரர் ஆலையம்.
காசிப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்த இரண்யகசிபு தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் உட்பட நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாதென்று பிரம்மாவை நோக்கிக் கடுந்தவமிருந்து வரம் பெற்றான். அதன்படியே வரம் பெற்றதும் நான் என்ற மமதை உண்டானது. என்னை யாராலும் வெல்ல முடியாது; அனைத்துலகங்களையும் ஆளப்போகிறேன் என்று தேவர்கள், மனிதர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான்.
நானே கடவுள்; என்னைத் தவிர யாரும் தலைவனும் இல்லை கடவுளும் இல்லை என்று ஆணவம் கொண்டதோடு, அனைவரையும் தன் பெயரைமட்டும் உச்சரிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான்.
இரண்யகசிபுவின் அட்டகாசத்தைப் பொறுக்கமுடியாத தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவனுக்குப் பிறக்கப்போகும் மகன் பிரகலாதன் மூலம் இரண்யனுக்கு முடிவுகாலம் ஏற்படும் என்று கூறினார் மகாவிஷ்ணு. அதன்படி இரண்யனுக்கு மகனாகப் பிறந்த பிரகலாதன் சதாநேரமும் நமோ நாராயணா என்று திருமாலின் பெயரையே உச்சரித்தான்.
உலகமே என்பெயரை உச்சரிக்கிறது. என் மகன் அந்த திருமாலின் பெயரை உச்சரிப்பதா என்று கோபம் கொண்டு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைத் துன்புறுத்தியதோடு, அவனைக் கொல்லும்படியும் கட்டளையிட்டான். இறுதியில் பிரகலாதனைக் கடலில் தூக்கி வீசச் சொன்னதோடு, அவன் மேல் மலைப்பாறைகளை அடுக்கச் சொன்னான்.
இவ்வாறான இரண்யனின் பல கொடுமைகளிலிருந்து திருமால் கருணையினால் தப்பிய பிரகலாதன், கடலிலிருந்து மீண்டும் வந்து இரண்யன் முன்புபோய் நின்றான். இரண்யனுக்கு வியப்பும் கோபமும் அதிகரித்தது. கடும் கோபத்தோடு நீ எப்படி உயிர்பிழைத்தாய் என்று கேட்க, "தந்தையே, இன்னுமா உமக்கு விளங்கவில்லை? எம்பெருமானா கிய நாராயணமூர்த்தியின் மகிமையினால் தான் நான் உயிர்பிழைத்தேன். அவரின்றி ஓர் அணுவும் அசையாது' என்றான்.
இதைக் கேட்டு இரண்யனின் சினம் அதிகரித்தது. அப்படியானால் உன் இறைவன் நாராயணன் எங்கே இருக்கிறான் என்று கேட்க, துணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்; நாம் பேசும் சொல்லிலும் இருப்பார்; செயலிலும் இருப்பார் என்று பிரகலாதன் சொல்ல. அப்படியானால் உன் இறைவன் இந்தத் தூணிலும் இருப்பானா? என்று கொக்கரிக்க, ஆம்; இருப்பார் என்று பிரகலாதன் சொல்ல, கடும் சீற்றத்துடன் தன் கதாயுதத்தால் எதிரே இருந்த தூணைப் பிளந்தான் இரண்யகசிபு.
பிளந்த தூணிலிருந்து உலகமே நடுங்கும் பேரிடிச் சத்தத்தோடு, புகை மண்டலத்தின் நடுவே பெரும் கர்ஜனையோடு, சிங்க முகத்தோடும் மனித உடலோடும் உக்கிரநரசிம்மராக பெருஞ்சினத்தோடு வெகுண்டெழுந்தார் மகாவிஷ்ணு. அசுரர்கள் மிரண்டு ஓடினார் கள், இரவும் பகலுமற்ற அந்திநேரத்தில் இரண்யனைப் பிடித்துத் தன் தொடைமீது கிடத்தி, தன் கூரிய நகங்களால் அவனது வயிற்றைப்பிளந்து குடலை உருவி மாலையாகச் சுற்றிக்கொண்டு அவனது குருதியைக் குடித்தார். இரண்யன் மாண்டதையறிந்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரமென்பது குறிப்பிடத்தக்கது.
இரண்யனை வதம் செய்த பிறகும் அசுரனின் ரத்தத்தைக் குடித்ததால் நரசிம்ம மூர்த்தியின் சினம் தணியவில்லை. இதனால் கலங்கிய தேவர்கள் பயம் கொண்டனர்.
அவரின் கோபத்தைத் தணிக்க பிரார்த்தனை செய்தனர். அப்போதும் கோபம் தணியவில்லை. தேவர்களின் தலைவன் தேவந்திரனிடம் சென்று முறையிட்டனர். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும் சக்தி எனக்கில்லை என தேவேந்திரன் தேவர்களுடன் பிரம்மனிடம் ஓடி முறையிட்டார். அவரும் தம்மால் நரசிம்மரை நெருங்க முடியாது; அவரது கோபத்தைத் தணிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை என்றார்.
அடுத்து பிரகலாதனிடம் முறையிட, அவன் நரசிம்ம மூர்த்தியின் சினம் தணிய வேண்டித் துதித்தான். பிரகலாதனைத் தன் மடிமீது அமர வைத்து கட்டித் தழுவினார் நரசிம்மர். ஆனால் அப்போதும் அவரது கோபம் தணியவில்லை. அடுத்து தேவர்கள் விநாயகரிடம் சென்று முறையிட்டனர். அவராலும் கோபத்தைத் தணிக்க முடியவில்லை. நரசிம்மரின் கோபம் மேலும் மேலும் அதிகரித்தபடியே இருந்தது. முடிவில் பரம்பொருளாகிய எம்பெருமான் பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர். அவர் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரர் சென்று வேண்டியும் நரசிங்கப்பெருமாளின் சினம் தனியவில்லை. வீர பத்திரர் சிவ பெருமானை வேண்ட, அங்கே ஆயிரம் கோடி சூரியப் பிரகாச ஒளி தோன்றியது. அதிலிருந்து எட்டுக் கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட கோரைப்பற்கள், இருபக்கமும் இரண்டு இறக்கைகள் ஆகியவற்றுடன் சரபேஸ்வரர் வெளிப்பட்டார்.
நரசிம்மரின் அவதாரம் சிங்கத் தலையையும் மனித உடலையும் கொண்டது. ஆனால் சரபேஸ்வரரின் அவதாரமோ யாளி, மனிதன், பறவை எனும் மூன்று உருவங்களும் கலந்ததாகும். யாளி என்பது மிருகங்களில் மிகவும் சக்திவாய்ந்த மிருகமாகும், பறவைகளில் சரபம் எனும் பறவை மிகவும் சக்திவாய்ந்தாகும். அதாவது மனிதத் தன்மையும் மிருகத் தன்மையும் பறவைத் தன்மையும் ஒருங்கே அமையப்பெற்ற தெய்வ வடிவமே சரபேஸ்வர உருவமாகும். கொடிய சத்ருகளை அழித்து, தீராத இன்னல்களைத் தீர்த்து, சரணமடைந்தவர்களுக்கு அபயமளித்துக் காக்கும் தெய்வம் ஸ்ரீ சரபருத்ரனே என்று வேதங்கள் சொல்கின்றன.
அப்படிப்பட்ட சரபேஸ்வரர் உருவமெடுத்த சிவபெருமான் நரசிம்மரை அணைத்து அவரது கோபத்தைத் தணிக்க முயன்றார். அப்போதும் சினம் தணியாத நரசிம்மர் சரபேஸ்வரருடன் போரிட ஆரம்பித்தார். 18 நாட்கள் நடந்த போருக்குப் பிறகு, சரபேஸ்வரர் நரசிம்மரை அப்படியே ஆகாயத்தில் தூக்கியபடியே தமது இரு இறக்கைகளாலும் விசிறி விட, சற்று கோபம் தணியத் தொடங்கினார். முற்றிலும் சினம் தணிந்த நரசிம்மமூர்த்தி சாந்தமடைந்து, தன் கோபத்தின்மூலம் நடந்த சம்பவங்களை எண்ணி வருந்தினார்.
18 நாட்கள் நடந்த போரின் நினைவாக 18 சுலோகங்களைக் கூறி சிவபெருமானைத் துதித்தார்.
அதுவே சரபேஸ்வரரைத் துதிக்கும் 108 துதி களானது. நரசிம்மரும் சரபேஸ்வரரும் ஒன்றாகக் கலந்து தேவர்களை நோக்கி, தண்ணீரையும் தண்ணீரையும், பாலையும் பாலையும், நெய்யையும் நெய்யையும் எப்படிப் பிரிக்கமுடியாதோ அப்படியே நாங்கள் இருவரும் உள்ளோம். இருவரும் ஒன்றே என நினைத்து எங்களைத் துதியுங்கள் என்றனர்.
இந்த சம்பவம் நடந்த அதே தினத்தில்தான் ராமேசுவரத்திலும் காசியிலும் ஸ்ரீராமபிரான் சிவசிவ எனும் நாமத்தைச் சொல்லி பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. அரியும் அரனும் ஒன்றென்பதை விளக்கவே இறைவன் சரபேஸ்வரர் அவதாரத்தில் தோன்றினார் என்று கூறப்படுகிறது.
சரபேஸ்வரர் எட்டுக் கால்களும், மான், மழு, நாகம், அசுவினி, சந்திரன், சூரியன் ஆகியவற்றையும் கொண்டவர். இரு இறக்கைகளில் ஒன்றில் பிரத்தியங்கராதேவியும், இன்னொன்றில் துர்க்காதேவியும் குடிகொண்டுள்ளனர்.
நரசிம்மமூர்த்தியின் கோபத்தைத் தணித்த சரபேஸ்வரர் ஆலயம் கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத் தில் உள்ளது. இக்கோவில் மூலவராக உள்ள லிங்கத்திருமேனியார் கம்பகரேஸ்வரர், திருபுனேஸ்வரர் என்றும், நடுக்கம் தீர்த்தவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவருக்கு இடப்புறமுள்ள தனிச்சந்நிதியில் அம்பாள் தர்ம சம்வர்த்தினியாக (அறம் வளர்த்த நாயகி) அருள்கிறாள். இவளுக்கு எதிரே தெற்குநோக்கி சரபேஸ்வரர் காட்சியளிக்கிறார். பாண்டிய மன்ன னான வரகுணபாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து உடல் நடுங்கி நோயால் பாதிக்கப்பட்டார். இத்தலம் வந்து பூஜை செய்து வழிபட்டபின் அவரது நோயையும் உடல் நடுக்கத்தையும் தீர்த்து வைத்துள்ளார் இறைவன். அதனால் இவருக்கு நடுக்கம் தீர்த்தவர் என்று பெயர்.
பிரம்மா இங்கு வந்து பிரம்மோற் சவம் செய்து வைத்தாராம். மேலும் நிலநடுக்கம், இடிமின்னல், புயல், சூறா வளி, தீ, விஷக்கடிகள், மனோவியாதிகள், தீராத உடல் உபாதைகள், ஊழ்வினை காரணமாக பரிகாரமே காணமுடியாத துன்பங்கள்கூட சரபேஸ்வரரை வழிபட்டால் கானல் நீராகப் பறந்து ஓடிவிடும்.
விதியை மாற்றும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. கொடிய சத்ருகளை அழித்து, தீராத இன்னல்களைத் தீர்த்து வைப்பார். பில்லி, சூன்யத்திலிருந்து விடுபடலாம். புத்திரபாக்கியம் கிட்டும். நல்லவர்களுக்கு எதிராகத் தோன்றும் எதிரிகள் பயம் விலகும். இப்படி அனைத்தும் பெற சரபேஸ்வரரை வணங்க வாருங்கள் என்கிறார் இவ்வாலய அர்ச்சகர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி குருக்கள்.
பல்வேறு குடும்பத்தினர் இங்கு வந்து வழிபட்டு நோய்களிலிருந்தும், பயத்திலிருந்தும், எதிரிகள் தொல்லையிலிருந்தும் விடுபட்டு சீரும் சிறப்போடும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் மூலம் இவ்வாலயச் சிறப்பினையறிந்து இங்கு வழிபாடு செய்ய வந்துள்ளோம் என்கிறார்கள் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சரோஜா கணேசன் குடும்பத்தினர்.
இந்த ஊருக்கு திருபுவனம் என்ற பெயர் எப்படி உருவானது? முன்னொரு காலத்தில் அச்சுக்கிரீவன், விடபக்கிரீவன், வியாபக்கிரீவன் என்ற மூன்று அசுரர்கள் இருந்தனர். அவர்களை ஆரம்பத்திலேயே அழித்திடவேண்டும் என்று எண்ணிய தேவர்கள் அந்த அசுரர்கள் சேனையோடு கடும்போர் நடத்தினார்கள். இதனால் மிரண்டுபோன அசுரர்கள் மண்ணுலகத்தை வந்தடைந்து மாறுவேடத்தில் திரிந்தனர்.
அப்போது வில்வமரங்கள் அடர்ந்த ஒருகாட்டில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். அந்த மூன்று அசுரர்களும் அப்பெருமானிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களின் தவத்தை மெச்சிக் காட்சி கொடுத்த இறைவன் வேண்டிய வரமளித்தார்.
அப்போது அந்த மூன்று அசுரர் களும் சிவபெருமானிடம், எம்பெருமானே, எங்கள் பகைவர் களாகிய தேவர்களால் அடக்கப்பட்டு நாங்கள் பெரிதும் துண்புற்றோம். உயிருக்கு அஞ்சினோம். தாங்கள் எங்கள் அச்சத்தைப் போக்கினீர்கள். அது மட்டுமின்றி தேவர்களை அடக்கியாளும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும். தேவராலும் யாவராலும் அழிக்கமுடியாதவையும்; பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதுமான (திரிபுரம்) மூன்று கோட்டைகள் எங்களுக்குக் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார்கள். இறைவனும் அவ்வாறே கிடைக்கச் செய்தார்.
இறைவனின் அருள்பெற்ற அசுரர்கள் மூவரும் அப்போது முதல் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார் ஈசன். சூரிய சந்திரர்கள் தேர்சக்கரங்களாகவும், பூமியையே தேராகவும், மேருமலையை வில்லாகவும் கொண்டு மூன்று அசுரர்களையும் அழித்தார் சிவபெருமான். அந்த அசுரர்கள் வாழ்ந்த வில்வவனமே இப்போது திருபுவனமாக உள்ளது. மேலும் மூன்று அசுரர்கள் (திரி) பொன், வெள்ளி, இரும்பால் கோட்டை கட்டி வாழ்ந்த பகுதியென்பதால் திரிபுவனம் என்று பெயர் பெற்றதாக வரலாறு.
ஸ்ரீகண்ட சம்பு என்பவரின் மகன் இவ்வாலயத்திலுள்ள அம்மையப்பரை உருவாக்கியுள்ளார். பிறகு சோழமன்னர்களில் ஒருவரான குலோத்துங்க சோழன் தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற வடிவமைப்புடன் இக்கோவிலை எழுப்பியுள்ளார். சுமார் 800 ஆண்டுகளுக்குமேல் பழமையானது இவ்வாலயம். தர்மபுர ஆதீன குருமகா சந்நி தானம் ஸ்ரீ மாசிலாமனி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் அவர்களின் பராமரிப்பில் இக்கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாக அனைத்து விழாக்களும் நடை பெற்றுவருகின்றன.
சிவபெருமானது 64 திருஅவதாரங்களில் 30-ஆவது அவதாரமான சரபேஸ்வரர் அவதாரம் அமைந்துள்ள ஆலயம் இது.
அமைவிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில், கும்ப கோணத்திலிருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ளது திருபுவனம் சரபேஸ் வரர் ஆலயம். தொடர்புக்கு: 0435-2460760.